அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீனில் விடுதலை: கருணாநிதியைச் சந்திக்கிறார்
தூத்துக்குடி:கொலை முயற்சி மற்றும் சதி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருச்செந்துர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இன்று ஜாமீனில் விடுதலை ஆனார்.
தன் மீதான வழக்குக் பொய்யானவை என்றும், அவற்றில் ஜாமீன் கேட்டும் தூத்துக்குடி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழஙகினார். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்லக்கூடாது எனஅவருக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.
விசாரணையின்போது, அவரிடம் நீங்கள் எங்கே இருக்க விரும்புகிறீர்கள் என்று நீதிபதி கேட்டதற்கு, சென்னையில் தங்குவதாக பதிலளித்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கினார் நீதிபதி.
ஜாமீன் உத்தரவை இன்று அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர் கிருபாகரன், திருச்சி சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
அதன் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்க கிளம்பியுள்ளார்.
பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி: உண்மையில் அத்வானி ஆதரிக்கிறாரா?
டெல்லி: 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக சார்பில் பிரதமர் பதவிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிறுத்தப்படுவார் என்று அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளதற்கு, அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மீண்டும் பிரதமர் பதவிக்கு தன்னை தயார்படுத்தும் வகையில் ரத யாத்திரை மேற்கொள்ள அத்வானி திட்டமிட்டுள்ளார். இந் நிலையில் பிரதமர் பதவிக்கு மோடியை ஆதரித்து அத்வானி தனது பிளாக்கில் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்வானி தனது பிளாக்கில் எழுதியிருப்பதாவது: நரேந்திர மோடியை பிரதமராக முன் நிறுத்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக முயல்வதாக அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மிகச் சிறந்த நிர்வாகத் திறனுக்கு மோடியே சாட்சி என்றும், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதத்தை மட்டுமே கொண்ட குஜராத், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்வதாகவும் அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால் மோடியை பிரதமராகக் கொண்டு பாஜக ஆட்சிக்கு வருவதை அமெரிக்கா விரும்புவது தெளிவாகவே தெரிகிறது.
எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் மோடி மீண்டும் எழுந்து நின்று தன்னை நிரூபித்திருக்கிறார். அதற்கு நல்ல உதாரணம் கடந்த 12ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. இந்திய அரசியல் வரலாற்றில் மோடிக்கு நேர்ந்தது போல் எந்தத் தலைவருக்கும் எதிராக இத்தனை பொய்ப் பிரசாரங்கள் ஏற்பட்டதில்லை.
2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க சவாலுக்குரிய ஒரு நபர் தேவை. அதற்குத் தேவையான பல்வேறு மாற்றங்களை பாஜக செய்துள்ளது. அது ஹிந்துத்வா தொடர்பான விஷயங்களைக் காட்டிலும் வளர்ச்சி, நல்லாட்சி ஆகியன குறித்த விஷயங்களை உள்ளடக்கியது.
குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற மதக் கலவரங்களைத் தடுக்கத் தவறியதாக மோடி மீது குற்றஞ்சாட்டப்பட்டதிலிருந்தே, அவர் வளர்ச்சிப் பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
2005ம் ஆண்டு நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா தர மறுத்த விவகாரத்தை நான் ஹிலாரி கிளிண்டனை சந்தித்தபோது எழுப்பினேன். மோடி விசா கோரி விண்ணப்பிக்கவே இல்லாத நிலையில் அவரது விசாவை நிராகரிப்பதாக அமெரிக்க அரசு கூறியது நியாயமற்றது முறையற்றது என்று கூறியுள்ளார் அத்வானி.
இவ்வாறு நரேந்திர மோடியைப் சரமாரியாகப் புகழ்ந்துள்ள அத்வானி, 2014ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று திட்டவட்டமாக ஏதும் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரதமர் பதவி- மோடிக்கு ஆதரவா?- நேரடியாக பதிலளிக்க ஜெ மறுப்பு
சென்னை: வரும் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் ஆதரிப்பீர்களா என்று கேட்டதற்கு, நேரடியாக பதில் சொல்லாமல் தவிர்த்தார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னையில் இன்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: நரேந்திர மோடி உண்ணாவிரதத்தை ஏன் அதிமுக அளிக்கிறது?
பதில்: நரேந்திர மோடி சமூக நல்லிணக்கம் மற்றும் சமாதானம், ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். மதச்சார்பற்ற நிலை, சமூக ஒற்றுமை, அமைதி ஆகியவைதான் எங்கள் கொள்கை. அவரது நிலையும் இதை ஒத்திருக்கிறது. இதனால் ஆதரிக்கிறோம்.
நரேந்திரமோடி என்னுடன் போனில் தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்துக்கு சிலரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். எனவே எங்கள் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் தம்பித்துரை, மைத்ரேயன் ஆகிய 2 எம்.பிக்களை அனுப்பி வைத்தேன்.
கேள்வி: இது தேசிய அளவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா?
பதில்: அப்படியல்ல. நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் இந்த ஆதரவு. வேறு எதுவும் இல்லை. சமூக நல்லிணக்கம், அமைதிக்காக இந்த உண்ணாவிரதத்தை மோடி மேற்கொண்டுள்ளார். அதை நான் ஆதரிக்கிறேன்.
கேள்வி: 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் ஆதரிப்பீர்களா?
பதில்: இது யூகத்தின் அடிப்படையிலான கேள்வி. அப்படி அறிவிக்கப்பட்டால் அந்த நேரத்தில் பதில் சொல்வேன்.
கேள்வி: பெங்களூரில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் விசாரணை நடத்த கர்நாடக நீதிமன்றம் தடைவிதித்திருப்பதை உங்களுக்கு பின்னடைவாகக் கருதுகிறீர்களா?
பதில்: இல்லவே இல்லை. எனது வக்கீல்கள் இந்த வழக்கை சிறப்பாக கையாண்டு வருகிறார்கள்.
கேள்வி: அக்டோபர் 20ம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவீர்களா?
பதில்: தேதி நிர்ணயித்து இருக்கிறார்கள். இதுபோன்று கடந்த காலங்களில் பல வழக்குகளில் ஆஜராகி இருக்கிறேன். இது எனக்கு புதிய விஷயமல்ல, பின்னடைவும் அல்ல என்றார் ஜெயலலிதா.
கே.என்.நேரு, சகோதரர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்!
திருச்சி: சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவரது சகோதரர்கள் ராமஜெயம், ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோரது வங்கிக் கணக்குகளை லஞ்ச ஒழிப்புப் போலீசார் முடக்கியுள்ளனர்.
நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று கே.என்.நேரு, வீடு, அவரது சகோதரர்கள் ராமஜெயம், மணிவண்ணன், ரவிச்சந்திரன் ஆகியோரது வீடுகள் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அதே போல திருப்பூர் அசினாசி சடையம்பாளையத்தில் உள்ள நேருவின் நண்பர் ரவிச்சந்திரன் என்பவர் வீட்டிலும் சோதனை நடந்தது.
மொத்தத்தில் சென்னை, திருச்சி, கோவை பகுதிகளில் 14 இடங்களில் சோதனைகள் நடந்தன.
இந் நிலையில் நேரு, மற்றும் அவரது சகோதரர்கள், குடும்பத்தினரின் வங்கி கணக்குகளை முடக்க லஞ்ச ஒழிப்புத் துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் காங்- தேமுதிக கூட்டணிக்கு தீவிர முயற்சி!
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருவதாகத் தெரிகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்று கூறி காங்கிரஸை வெட்டிவிட்டுவிட்டது திமுக.
இந் நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பின்னர் நிருபர்களிடம் பேசிய அக் கட்சியின் மாநிலத் தலைவரான தங்கபாலு,
இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் எடுக்க வேண்டிய நிலை பற்றி ஆராயப்பட்டு அகில இந்திய தலைமைக்கும் தெரிவித்து, அவர்கள் ஒப்புதலுடன் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்ற முடிவை அறிவிக்கிறோம். இந்த தேர்தலுக்காக மாநில, மாவட்ட தேர்தல் குழுக்கள் அமைக்கப்படும்.
18ம் தேதி முதல் 20ம் தேதி வரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படும். மாவட்ட குழுக்கள் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானவர்களை மாநில குழுவுக்கு அனுப்பும். மாநில குழு வேட்பாளர்களை அறிவிக்கும்.
காங்கிரஸ் கட்சி அனைத்து பொறுப்புகளுக்கும் போட்டியிட்டு வெற்றியை பெற மத்திய அரசின் சாதனைகளையும், அதனால் தமிழகம் பெற்ற பலன்களையும் எடுத்துக் கூறி மக்களின் ஆதரவை பெற வேண்டும். இதற்கு காங்கிரசார் முழுமூச்சுடன் பாடுபட வேண்டும்.
நாங்கள் தனித்து போட்டியிட எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும் எடுக்கப்படும் முடிவு அந்தந்த சூழலில் எடுக்கப்படுவது. கூட்டணி என்பது நிரந்தரமல்ல. இதில் எந்த குழப்பமும் இல்லை.
மத்திய அளவில் தி.மு.கவுடனான கூட்டணி தொடர்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியில் கூட்டணி தர்மப்படி தி.மு.க. போட்டியிட்ட தொகுதி என்பதால் அவர்களுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறோம் என்றார்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டால் தேமுதிகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா? என்று கேட்டதற்கு, இன்னும் வருகிற நாட்களில் ஏற்படும் நிலைமைகளை அனுசரித்து தேவையான, உகந்த முடிவுகளை சூழ்நிலைக்கு ஏற்ப எடுப்போம் என்றார் தங்கபாலு.
இந் நிலையில் காங்கிரஸ் தரப்பில் சில முக்கிய பிரமுகர்கள் தேமுதிகவுடன் பேசி வருவதாகவும், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ்-தேமுதிக கூட்டணிக்கு தீவிர முயற்சிகள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எனக்குத் தெரியாது-இளங்கோவன்:
இதற்கிடையே அதிமுக ஆதரவு நிலை கொண்ட மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும்?
பதில்: திமுகவுடன் இருந்து பெறும் வெற்றியை விட பெரிய வெற்றி காங்கிரசுக்கு கிடைக்கும். ஒன்றிரண்டு மாநகராட்சிகள், 10 நகராட்சிகளை காங்கிரஸ் கட்சி பிடிக்கும்.
கேள்வி: எதிர்காலத்தில் மீண்டும் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா?
பதில்: எதிர்காலத்திலும் திமுகவுடன் கூட்டணி இருக்க கூடாது என்று தான் நாங்களும், காங்கிரஸ் தொண்டர்களும் விரும்புகிறோம்.
கேள்வி: தேமுதிகவை காங்கிரசுடன் சேர்க்க முயற்சி நடக்கிறதா?
பதில்: அப்படி ஏதும் முயற்சி நடப்பதாக எனக்கு தெரியவில்லை.
கேள்வி: உள்ளாட்சி தேர்தல் பிரச்சார வியூகம் எப்படி இருக்கும்?
பதில்: ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகம், தீவிரவாத எதிர்ப்பு ஆகியவற்றை மையமாக வைத்து தமிழக தலைவர்கள் ஒருங்கிணைந்து பிரச்சாரம் செய்வோம். ராகுல் காந்தியையும் பிரச்சாரத்துக்கு அழைப்போம் என்றார்.
என் தவறுகளை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி: நரேந்திர மோடி
அகமதாபாத்: உலகில் எந்த தனி மனிதரும், மாநிலமும், நாடும், சமூகமும் மிகவும் சரியாக இருப்பதாக மார்தட்டிக் கொள்ள முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக எனது தவறுகளை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. குஜராத்தின் முதல்வர் என்ற முறையில் எனது மாநிலத்தில் எந்த ஒருவருக்கும் ஏற்படும் வலியும் எனக்கு ஏற்படும் வலியாகவே கருதுகிறேன். அனைவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டியதை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத் மக்களுக்கு அவர் எழுதியுள்ள இரு கடிதங்களில் கூறியுள்ளதாவது:
அன்பு சகோதரக்களே, சகோதரிகளே, குஜராத் கலவர வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பை சிலர் வெற்றி என்றும் வேறு சிலர் தோல்வி என்றும் கூறுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உள்ளது.
2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த வன்முறைகளில் எனக்குத் தொடர்பு இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி ஏற்படுத்தப்பட்ட மோசமான சூழலுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடிவு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் மீதும் என்மீதும் அவதூறுப் பிரசாரம் செய்வதே 'பேஷன்' என்பது போல ஆகியிருந்தது. குஜராத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களே இதுபோன்ற அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வந்தனர். இதன்மூலம், ஆரோக்கியமற்ற சூழலை ஏற்படுத்த முயற்சித்தனர்.
இப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்திருக்கிறது. இதன் பிறகாவது என் மீதான அவதூறு பிரச்சாரம் நிறுத்திக் கொள்ளப்படுமா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது. ஆனால் இத்தனை ஆண்டுகளாகப் பொய்களைக் கட்டவிழ்த்து விட்டோர் மீதான நம்பகத்தன்மை இனி குறைந்து போகும் என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும். இனி இதுபோன்ற நபர்களை, நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள்.
எத்தனையோ பொய்ப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் கடந்த பத்து ஆண்டுகளில் அமைதி, நல்லிணக்கம், பொருளாதாரத்தில் குஜராத் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதே பாதையில் தொடர்ந்து நடைபோட வேண்டும் என்பதிலும் குஜராத் மக்கள் உறுதியாக உள்ளனர்.
வெறுப்பை வெறுப்பால் வெற்றி கொள்ள முடியாது. நமது நாட்டின் உண்மையான பலம் ஒற்றுமையிலும் நல்லிணக்கத்திலும்தான் இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு. இதைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
குஜராத் மாநிலத்தில், சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், அமைதியையும் பலப்படுத்தும் பொறுப்பு, எனக்கு உள்ளது. இதற்காக சத்பாவன மிஷன் என்கிற இயக்கத்தைத் இயக்கத்தை துவக்கியுள்ளேன். அதன் ஒரு பகுதியாகவே சனிக்கிழமை முதல் 19ம் தேதி வரை 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கிறேன்.
இதன்மூலம் குஜராத் மாநிலத்தின் சமூக நல்லிணக்கம், இந்த உண்ணாவிரதத்தால், மேலும் பலமாகும் என்று நம்புகிறேன்.
20ம் நூற்றாண்டு குஜராத்துக்கு நல்ல தொடக்கமாக அமையவில்லை. 2001ம் ஆண்டு குடியரசு தினத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் நடந்த மதக் கலவரமும் ஏராளமான உயிர்களை பலி கொண்டது. பொருட் சேதங்களும் வலிகளும் நம்மை சூழ்ந்தன.
ஆனால், அதையெல்லாம் தாண்டி குஜராத் வளர்ச்சிப் பாதையில் நடை போட ஆரம்பித்தது.
உலகில் எந்த தனி மனிதரும், மாநிலமும், நாடும், சமூகமும் மிகவும் சரியாக இருப்பதாக மார்தட்டிக் கொள்ள முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக எனது தவறுகளை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி.
குஜராத்தின் முதல்வர் என்ற முறையில் எனது மாநிலத்தில் எந்த ஒருவருக்கும் ஏற்படும் வலியும் எனக்கு ஏற்படும் வலியாகவே கருதுகிறேன். அனைவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டியதை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை.
ஜாதி மோதலும் மத வன்முறையும் நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பது நமது நாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் நன்றாகப் புரியும். குஜராத்தும் இதை நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டது. இதனால் தான் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் வளர்ச்சிப் பாதையை நோக்கி மாநிலம் நடை போட்டுக் கொண்டுள்ளது.
தவறுகள் நடக்காமல் இனி தொடர்ந்து மக்களுக்காக உழைத்திட உங்களது ஆசிர்வாதத்தை எதிர்நோக்கி உள்ளேன்.
எனது உண்ணாவிரதத்தின்போது, கடந்த காலங்களில் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் மீது எனக்கு கோபமோ அல்லது கசப்புணர்வோ வந்துவிடாமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வந்தே மாதரம்!
Always remains yours,
நரேந்திர மோடி
இவ்வாறு தனது கடிதத்தில் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சுத்தமான ஏமாற்று வேலை-காங்கிரஸ்:
மோடியின் இந்த உண்ணாவிரத அறிவிப்பு மக்களை ஏமாற்றும் வேலை என காங்கிரஸ் கூறியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இந்த உண்ணாவிரத்தால் மக்களை மோடியும் பாஜகவும் ஏமாற்றிவிட முடியாது. தனது தவறுக்கு மக்களிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்பதன் மூலமே மோடி தனது உண்மையான அனுதாபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரம் - 21 அழகிகள், 12 புரோக்கர்கள் கைது
சென்னை: சென்னையில் அழகு நிலையம் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் செய்து வந்த 12 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பல மாநிலங்களைச் சேர்ந்த 21 அழகிகள் மீட்கப்பட்டனர்.
சென்னை நகரில் அழகு கலை நிலையங்களும், ஆயுர்வேத மசாஜ் நிலையங்களும் தெருவுக்குத் தெரு விதவிதமான பெயர்களில் செயல்பட்டு வருகின்றன.
வீட்டுக்கே வந்து விரும்பும் வகையில் மசாஜ் செய்கிறோம் என அழகிய பெண்களின் படத்தைப் போட்டு விளம்பரங்கள் செய்து வருகின்றனர்.
மசாஜ் கிளப் என்ற பெயரில் சில இடங்களில் விபச்சாரம் நடப்பதாக சென்னை போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
இந்த மாதிரி புரோக்கர்களை பிடிக்கவும், அவர்களிடம் சிக்கித்தவிக்கும் இளம் பெண்களை மீட்கவும் கமிஷனர் ஜே.கே.திரிபாதி, கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங், இணை கமிஷனர் பொன்.மாணிக்கவேல் ஆகியோரின் உத்தரவுப்படி போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீஸ் தனிப்படையினர் முதலில் ஆங்கில பத்திரிகையில் வெளிவந்த அழகு கலை மசாஜ் சம்பந்தமான விளம்பரங்களில் கொடுக்கப்பட்ட முகவரிகளை சேகரித்தனர். அதில் ஒரு விளம்பரத்தில், நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை அருகில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் மசாஜ் கிளப் செயல்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
வாடிக்கையாளர் போல...
இதைத்தொடர்ந்து அந்த மசாஜ் கிளப்பை கண்காணிக்க போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி, அந்த தனியார் மசாஜ் கிளப்பில் வாடிக்கையாளர் போல் ஒரு போலீஸ் அதிகாரியை அனுப்பினர். அந்த அதிகாரியை வாடிக்கையாளர் என்று கருதி கொண்ட மசாஜ் கிளப்பினர் அவரிடம், 'உங்களுக்கு அழகிகள் வேண்டுமா?' என்று கேட்டனர். அதற்கு அவர், 'நான் நாளை வருகிறேன்' என்று கூறி வெளியே வந்துவிட்டார்.
அந்த மசாஜ் கிளப்பில் விபசாரம் நடப்பதை உறுதி செய்துகொண்ட போலீசார், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையில் உள்ளே புகுந்தனர். இதை சற்றும் எதிர்பாராத மசாஜ் கிளப்பினர் போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து விபசார தடுப்பு போலீசார் கிளப்பில் இருந்த மணிப்பூர், ஆந்திரா, கேரளா மற்றும் சென்னையை சேர்ந்த 6 அழகிகளை மீட்டனர். அவர்களை வைத்து விபசாரம் செய்து வந்த அஜீஸ்குமார் தாஸ், அவரது நண்பர் ரேணுகா என்ற பிரியா ஆகியோரை கைது செய்தனர்.
21 அழகிகள், 12 புரோக்கர்கள்
இதைத்தொடர்ந்து ஆங்கில நாளிதழ்களில் வந்த மற்ற விளம்பரங்களை கொண்டு போலீசார் சோதனை மேற்கொண்டு வந்ததில் ஏராளமான மசாஜ் கிளப்புகள் விபசார மையங்களாக செயல்பட்டது தெரியவந்தது.
அதன் பேரில் தேனி மாவட்டத்தை சேர்ந்த குமார், மதுரையை சேர்ந்த கவுசிக், ஆந்திராவை சேர்ந்த லட்சுமணன், சூளைமேட்டை சேர்ந்த ஆனந்த், சைதாப்பேட்டையில் விபசாரம் செய்து வந்த கேரளாவை சேர்ந்த ரஜீஸ், ரஞ்சித்தேவ், ஆர்.ஏ. புரத்தை சேர்ந்த ஜெகன் மோகன் ராவ், வேளச்சேரியை சேர்ந்த மகாலட்சுமி, கே.கே.நகர் ராணி, வடிவேல், கொளத்தூர் பகுதியை சேர்ந்த அகிலன், வடபழனியை சேர்ந்த இக்பால் ஹாரீஸ் ஆகிய 12 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்த மசாஜ் கிளப்பில் இருந்த மும்பை, கல்கத்தா, கேரளா, ஆந்திரா ஆகிய பகுதிகளை சேர்ந்த 15 இளம் பெண்கள் மீட்கப்பட்டன. ஏற்கனவே அமைந்தகரையில் மீட்கப்பட்ட அழகிகளையும் சேர்த்து 21 அழகிகள் மீட்கப்பட்டு கோர்ட்டு உத்தரவுப்படி மைலாப்பூர் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
குண்டர் சட்டம் பாயும்
சென்னை நகரில் ஆயுர்வேத மசாஜ், அழகு நிலையம் என்ற பெயரில் விபசாரம் நடத்தி வரும் புரோக்கர்கள் பற்றி தெரியவந்தால் அது குறித்து விபசார தடுப்பு போலீசாருக்கு பொது மக்கள் தகவல் கொடுக்கலாம். அழகு கலை என்ற பெயரில் விபசாரம் செய்வது தெரியவந்தால் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக இட பங்கீடு பேச்சுவார்த்தை- விஜய்காந்த் புறக்கணிப்பு
சென்னை: உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அதிமுக நடத்திய பேச்சுவார்த்தையில் தேமுதிக கலந்து கொள்ளவில்லை. எனவே, அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா என்பது சந்தேகமாகியுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன், விஜய்காந்தின் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் 29 சட்டசபை தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது. ஆனால், தேமுதிகவுக்கு இடங்கள் ஒதுக்குவதில் பெரும் டிராமா நடந்தது.
இந் நிலையில் உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீட்டிலும் இரு கட்சிகளிடையே மோதல் ஆரம்பித்துள்ளது.
இந்தத் தேர்தலில் மதுரை, சேலம், ஈரோடு, திருச்சி ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதவிகளைக் அதிமுகவிடம் கேட்டு வந்தது தேமுதிக. ஆனால், அதைத் தர மறுத்துவிட்ட முதல்வர் ஜெயலலிதா வேறு பதவிகளைக் கூட விட்டுத் தராமல், அனைத்து மேயர் பதவிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்து விஜய்காந்துக்கு பெரும் அதிர்ச்சி தந்துள்ளார்.
இந்த வேட்பாளர்களை அறிவித்த பின்னர் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியினருடன், இடப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை அதிமுக நேற்று தொடங்கியது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த இக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக கட்சி சார்பில் அதன் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் போயஸ் கார்டனுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை.
இதனால், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில், தேமுதிக நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒரு மேயர் பதவியைக் கூட விட்டுத் தராமல் அதிமுக வைத்த 'ஆப்பு' குறித்து தனது கட்சியின் நிர்வாகிகளுடன் விஜயகாந்த் நேற்றிரவு ஆலோசனை நடத்தினார். அதில், பலரும் தனித்துப் போட்டியிடலாம் என்று கூறியதாகத் தெரிகிறது. ஆனால், பண்ருட்டி போன்றோர் அதிமுக கூட்டணியில் நீடிப்பதே நல்லது என்று கூறியுள்ளதாகவும் தெரிகிறது.
இதுதொடர்பாக இன்றும் விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகளுடன் மேலும் ஆலோசனை நடத்த உள்ளார்.
எஸ்.பி.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு.. விரைவில் கைதாகிறார்!
சென்னை: நடிகை சோனா கொடுத்த புகாரில் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் எஸ்.பி.பி.சரண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதல்கட்ட போலீஸ் விசாரணைக்குப்பிறகு அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
பாலியல் பலாத்காரம்
நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் மீது பிரபல நடிகை சோனா பாலியல் குற்றம் சாட்டி நேற்று முன்தினம் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் பத்திரிகையாளர்களைக் கூட்டி கதறி அழுதபடி தனக்கு நேர்ந்ததைச் சொன்னார் சோனா.
பலர் முன்னிலையில் தன் மீது பாய்ந்த சரண், ஆடைகளைக் கலைந்ததாகவும் அவர் கூறினார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனாவின் இந்த புகார் மீது பாண்டிபஜார் போலீசார் நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்தனர்.
எஸ்.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உள்பட 4 சட்டப்பிரிவுகளின்கீழ் போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'முதல் கட்டமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக எஸ்.பி.பி.சரணிடம் விசாரணை நடத்தப்படும். உடனிருந்தவர்களையும் விசாரிப்போம். பின்னர் கைது செய்வது பற்றி முடிவு செய்யப்படும்,' என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் எஸ்.பி.பி.சரண் நேற்று போலீஸ் கமிஷனரை சந்தித்து தன் மீது கூறப்பட்டுள்ள புகார் தவறான புகார் என்பதை சுட்டிக்காட்டி விளக்க மனு ஒன்று கொடுக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், கமிஷனரை சந்திக்க அவர் வரவில்லை. அவர் கோர்ட்டில் முன்ஜாமீன் வாங்குவாரா? அல்லது விசாரணைக்கு பாண்டிபஜார் போலீசில் அவர் ஆஜராவாரா? என்பதும் தெரியவில்லை.
அஜீத் கால்ஷீட் ஏஎம் ரத்னத்துக்கு உண்டு... வெங்கட் பிரபுவுக்கு இல்லை!
அஜீத் தன் அடுத்த படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை பிரபல தயாரிப்பாளர் ஏ எம் ரத்னத்துக்கு வழங்கியுள்ளார். ஆனால், அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு வெங்கட்பிரபுவுக்கு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
அஜீத்தின் மங்காத்தா படம் வெளியான போதே, அடுத்த படம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இதில் ரொம்ப நாளாக தன்னிடம் கால்ஷீட் கேட்டு வந்த ஏ எம் ரத்னத்துக்கு முன்னுரிமை அளித்தார் அஜீத்.
இதைத் தொடர்ந்து அந்தப்படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்றும், அஜீத்துடன் சிம்புவும் இணைவார் என்றும் தகவல் வெளியானது.
ஆனால் இப்போது, படத்தை இயக்கும் வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்கு இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
இதைத் தொடர்ந்து, இந்தப் படம் விஷ்ணுவர்தனுக்கா அல்லது இயக்குநர் விஜய்க்கா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எப்படியும் வரும் வாரத்தில் இதை தெளிவாக்கிவிடுவார் 'தல' என்கிறது தயாரிப்பாளர் தரப்பு!
இந்தியில் காஞ்சனா... உறுதி செய்தார் சல்மான்கான்!
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து தமிழில் பெரும் வெற்றி பெற்ற திகில் காமெடி படமான காஞ்சனாவை இந்தியில் ரீமேக் செய்கிறார் சல்மான்கான். இதற்கான அதிகாரப்பூர்வமனா அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
இதுகுறித்து சல்மான்கான் சகோதரர் சோஹைல் கான் கூறுகையில், "சல்மான் அடுத்து நடிக்க இருந்த ஷெர்கான் படத்தை இப்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளோம்.
அடுத்து தமிழ்ப் படமான காஞ்சனா ரீமேக்தான். இந்தப் படத்தை நான் இயக்குகிறேன். ராகவா லாரன்ஸ் கதை - திரைக்கதை எழுதுகிறார்," என்றார்.
இந்தப் படம் 3 டியில் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சல்மான் இப்போது நடித்துவரும் ஏக்தா டைகர் படப்பிடிப்பு முடிந்ததும் காஞ்சனா துவங்கும். 2012 ரம்ஜானுக்கு இந்தப் படம் வெளியாகிறது.
சமீப காலமாக தமிழ்ப் படங்களை ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் சல்மான். வான்டட் (போக்கிரி), பாடிகார்ட் (காவலன்) போன்ற படங்கள்தான் அவருக்கு பெரிய வெற்றியைத் தந்துள்ளன என்பது நினைவிருக்கலாம்.
ரா ஒன்னில் ஷாரூக்கானைக் 'காப்பாற்றும்' ரஜினி!
ரா ஒன் படத்தில் ஷாருக்கானைக் காப்பாற்றும் சூப்பர் பவர் பாத்திரமாக நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினி ஒப்புக் கொண்டுள்ளார்.
உடல் நிலை சரி இல்லாமல் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இயல்பு நிலைக்கு அவர் திரும்பியதும் முதல் முறையாக கேமரா முன் தோன்றும் படம் ரா ஒன்தான் என்பது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக வந்துள்ளது.
ஷாரூக்கின் இந்த ரா-ஒன் படம் ரஜினியின் எந்திரன் படத்தின் அப்பட்டமான காப்பி என்றெல்லாம் செய்திகள் உலா வந்த நிலையில், எந்திரன் வேறு, ரா ஒன் வேறு. நாங்கள் ரஜினி மீது பெரும் மரியாதை வைத்துள்ளோம்.அவரை கவுரவிக்கும் விதத்தில் காட்சியும் வைத்துள்ளோம் என்று நேற்று முன்தினம் ஷாருக்கான் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரா-ஒன் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் தோன்றப் போவதாக மும்பை பத்திரிகைகள் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளன. இதுபற்றி கூறப்படுவதாவது:
ரா ஒன்னில் ஷாரூக்கானை பெரும் ஆபத்திலிருந்து காக்கும் ஒரு சூப்பர் மேன் வேடத்தில் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டுள்ளார்.
இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி நடக்கிறது. ஷாருக்கான் வில்லன்களிடம் சண்டை போடும் போது ஒரு கட்டத்தில் நிராயுதபாணியாக நிற்பார். அவர் உயிரை வில்லன்கள் பறிக்க ஆயத்தமாகும் தருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு சூப்பர் காரில் தனக்கே உரிய ஸ்டைலில் சர்ரென்று வந்து நிற்பார்.
அவரது கார் வில்லன்களின் ஆயுதங்களை தன்னுடன் ஈர்த்து ஷாருக்கானை காப்பாற்றும். அப்போது ஷாரூக்கின் உடனிருக்கும் கதாநாயகி கரீனா கபூர் யார் இவர் என்று ரஜினியை பார்த்து கேட்பார். உடனே ரஜினி தனக்கே உரிய பஞ்ச் வசனம் பேசியடி காரிலிருந்து இறங்குவாராம். அவரை ஷாரூக்கான் மிகுந்த மரியாதையுடன் அறிமுகப்படுத்துவது போன்று இக்காட்சி எடுக்கப்படுகிறதாம்.
ஆரம்பத்தில் இந்தக் காட்சியில் ரஜினிபோல வேறு ஒருவருக்கு மேக்கப் போட்டு எடுத்துவிட திட்டமிட்டார்களாம்.
ஆனால் படம் தமிழில், தெலுங்கிலும் வெளியாவதால் ரஜினியே தோன்றினால் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதால் அவரே நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து ரஜினியைத் தொடர்பு கொண்டாராம் ஷாரூக். ரஜினியும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தீபாவளிக்கு ரா-ஒன் படம் ரிலீசாகிறது இது தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்படுகிறது
கைமாறிய விக்ரமின் ராஜபாட்டை!
விக்ரம் நடிக்க சுசீந்திரன் இயக்கும் ராஜபாட்டை படத்தை பிரபல வர்த்தகர் பிரசாத் வி பொட்லூரி வாங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெய்வத் திருமகள் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம் இந்த ராஜபாட்டை. தெலுங்கில் பிரபலமான தீக்ஷா சேத் நாயகியாக அறிமுகமாகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படம் ரமேஷ் பாபுவின் கனகதாரா பேனரில் தயாராகி வந்தது.
இந்த நிலையில், ரமேஷ் பாபு பண நெருக்கடி மற்றும் சில சட்ட சிக்கல்களில் மாட்டிக் கொண்டதால், அவரிடமிருந்து பிரசாத் வி பொட்லூரியின் பிவிபி சினிமாஸ் பேனருக்கு மாறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ 39 கோடியில் தயாராகும் படம் இந்த ராஜபாட்டை. விக்ரமின் அதிகபட்ச பட்ஜெட் படம் இதுதான் என்கிறார்கள். அப்ப கந்தசாமி... 'சும்மா' சாமியா?
சோனா பப்ளிசிட்டி தேடுகிறார்! - சரண்
சென்னை: விளம்பரத்திற்காக தன் மீது நடிகை சோனா வீண் பழி சுமத்துவதாக தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் கூறியுள்ளார்.
பிரபல கவர்ச்சி நடிகை சோனா, மங்கத்தா படத்திற்காக இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் தனக்கு பாலியல் தொல்லைகொடுத்ததாக குற்றஞ்சாட்டினார். பாண்டி பஜார் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் கொடுத்துள்ளார்.
மேலும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, பகிரங்கமாக தன்னிடம் சரண் மன்னிப்பு கேட்காவிட்டால் தீக்குளிப்பேன் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் எஸ்.பி.சரண் சோனா புகாருக்கு மறுப்பு கூறியுள்ளார்.
சோனா தன் மீது வீண் பழி சுமத்துவதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''விருந்து நிகழ்ச்சியில் நான் எதுவும் முறை தவறி நடக்கவில்லை. சோனாதான் பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாம் செய்கிறார். படம் தொடர்பாக மட்டுமே அவரிடம் பேசினேன்,' என்றார்.
இதனிடையே விருந்து நிகழ்ச்சியில் இத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று இயக்குனர் வெங்கட்பிரபுவும் மறுத்துள்ளார்.
வெங்கட் பிரபுவும் சரணும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மம்முட்டியின் மகனின் 'செகண்ட் ஷோ'!
மலையாள சினிமா நடிகர் மம்முட்டியின் மகன் துல்ஹர் சல்மான் முதல் முறையாக மலையாள சினிமாவில் நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கு செகண்ட் ஷோ என தலைப்பு வைத்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் கூறுகையில், "மம்முட்டியின் மகன் துல்ஹர் சல்மான் செகண்ட் ஷோ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கிராமத்தில் வாழும் ஏழை இளைஞனாக நடிக்கும் அவர், இந்தப் படத்தில் எந்த வேலையையும் செய்ய தயாராக இருக்கிறார். நல்ல துடிப்பான இளைஞர். அவருக்கு ஜோடியாக புதுமுகம் கவுதமி நாயர் நடிக்கிறார். வில்லன் நடிகர் பாபுராஜும் இந்த படத்தில் இடம் பெறுகிறார்.
இந்த படத்தில் இந்தி நடிகர் சுதேஷ் பெரியும் நடிக்கிறார். அவர் இயக்குனர் மணி ரத்தினத்தின் 'அக்னி நட்சத்திரம்' என்ற படத்தில் நடித்தவர்,'' என்றும் ஸ்ரீநாத் ராஜேந்திரன் கூறினார்.
இது பற்றி நடிகர் மம்முட்டி கூறுகையில், "எனது மகன் சினிமாவில் நடிப்பது அவரது விருப்பம். அவர் நடிக்கும் சினிமாவின் கதையை மட்டும் நான் கேட்டுக் கொண்டேன். வேறு எதிலும் தலையிடவில்லை," என்றார்.
ஆரம்பத்தில் துல்ஹரை தமிழில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்தார் மம்முட்டி. ஆனால் அது முடியாமல் போனதாக வருத்தத்துடன் கூறியிருந்தது நினைவிருக்கலாம். துல்ஹர் பிறந்து, வளர்ந்து படித்ததெல்லாம் சென்னையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வராகவன் குடும்பத்தைக் கெடுக்க முயற்சிக்கவில்லை - ஆன்ட்ரியா
செல்வராகவன் குடும்பத்தை நான் கெடுக்க முயற்சித்ததாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று நடிகை ஆன்ட்ரியா கூறினார்.
செல்வராகவனுக்கும் அவரது முதல் மனைவி நடிகை சோனியா அகர்வாலுக்கும் பிரச்சினை ஏற்பட்டு விவாரத்து வரை போக காரணமானவர் நடிகை ஆன்ட்ரியாதான் என்று கூறப்பட்டது.
இதுகுறித்து ஏராளமான செய்திகள் ஊடகங்களில் வந்தன. இதை உறுதிப் படுத்தும் வகையில் ஆன்ட்ரியா, செல்வராகவனின் அனைத்துப் படங்களிலும் ஆஸ்தான நாயகியாக இருந்தார்.
ஆனால் செல்வராகவன் கீதாஞ்சலி என்ற பெண்ணை காதலித்து மணந்தார். அடுத்து, செல்வராகவனின் படங்களிலிருந்து ஆன்ட்ரியா நீக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆன்ட்ரியாவிடம் கேட்டபோது, பொரிந்து தள்ளிவிட்டார்.
"இந்தக் கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் யார் குடும்பத்தையும் கெடுக்கும் எண்ணம் கொண்டவள் அல்ல. திருமணமாகி மனைவியுடன் வாழும் ஒருவரை நான் கெடுக்க முயற்சித்ததாக கூறப்படுவது அநியாயம். செல்வராகவன் அவரது வாழ்க்கையை சந்தோஷமாக வாழட்டும்," என்றார்.
THANKS TO THATSTAMIL

0 comments:
Post a Comment